×

6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருவாரூர், ஏப். 27: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்காக 6 ஆயிரத்து 417 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்,

பயிற்சித் தாள்களுடன் கூடியபயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி-வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத்திட்டம், வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் சத்தான உணவு உண்டு வருவதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்துவது மட்டுமின்றி அவைகள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் திமுக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதையொட்டி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்குரிய பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் துவங்கவுள்ள 2024, 25 கல்வியாண்டிற்காக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலையாசிரியர்கள் மூலம் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின்னர் மாநிலம் முழுவதும் தற்போது வரையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டிற்காக ஒன்று முதல் 5 வகுப்புகள் வரையில் 3,697 மாணவர்களும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 2,306 மாணவர்களும், 9, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 414 மாணவர்களும் என மொத்தம் 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, மாணவர்கள் சேர்க்கைக்கு தீவிர விழிப்புணர்வே முக்கிய காரணம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டிற்காக ஒன்று முதல் 5 வகுப்புகள் வரையில் 3,697 மாணவர்களும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 2,306 மாணவர்களும், 9, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 414 மாணவர்களும் என மொத்தம் 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

The post 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur, Ap ,Thiruvarur ,Chief Education Officer ,Tamil Nadu ,Dimuka ,District ,Education ,Dinakaran ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்